இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு; நீட் தேர்வு குளறுபடிகள்; ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்துள்ளது என இப்படி தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் மனுக்களாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு மூலம் 24 லட்சம் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மோடி அரசு நடவடிக்கையால் நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நீட் தேர்வு மையத்திற்கும் பயிற்சி மையத்திற்கும் இடையே பரஸ்பர உறவு உருவாகி முறைகேடு நடந்துள்ளது. இரு மையங்களுக்கும் இடையே 'பணம் கொடு; பேப்பர் எடு' என்ற விளையாட்டு நடந்து வருகிறது. கருணை மதிப்பெண்கள் மட்டும் பிரச்சனை இல்லை. நீட் தேர்வுகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளன' எனக் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.