மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள தோகலாப்பள்ளி கிராமத்தில் பெண்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் நைட்டி அணிந்துக் கொண்டு தெருவில் நடமாட கிராம பெரியவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் நைட்டி அணிந்துகொண்டு கடைகளுக்கும் பிற பகுதிகளுக்கும் செல்வது அநாகரிகமாக உள்ளது என்று இந்த முடிவை கிராமமே ஒன்று சேர்ந்து எடுத்துள்ளது. இந்த தடை உத்தரவிற்கு கிராம மூதாட்டிகள் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தடையை மீறி நைட்டி அணிந்துகொண்டு சாலைகளில் வளம் வந்தால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும் என்றும், புகார் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 1000 நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த ஆறு மாதக்காலமாக அந்த கிராமத்தில் இருப்பது தற்போதுதான் ஊடகங்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரிய வந்துள்ளது. இதனை அறிந்து கிராமத்திற்கு சென்ற காவல் துறை அதிகாரிகள், சட்டத்தை பொதுமக்கள் கையில் எடுப்பது தவறு என்றும். இந்த தடைக்கு அபராதம் வாங்கினால் காவல்துறையில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துவிட்டு வந்துள்ளனர். ஆனால், கிராம மக்கள் யாரும் இந்த தடையை எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.