டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சர்வதேச தலைவர்களுக்குப் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி சிவப்புக் கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். அதேபோன்று பிரகதி மைதானத்தின் முன்பு தமிழகத்தின் 27 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி 20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் நாட்டின் பெயரைக் குறிக்க பிரதமர் மோடியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என இடம்பெற்றுள்ளது. ஜி20 அமைப்பில் 21வது உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைந்தது.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான நேரத்தில் மொரோக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே இந்தியாவின் கொள்கை. வளமான எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. போரினால் இழந்துள்ள நம்பகத் தன்மையை மீட்டெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.