புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சிம்லாவை சியாமளா என்று பெயர் மாற்ற ஆளும் பாஜக அரசு பரிசீலனை செய்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில வலதுசாரி இந்து அமைப்புகள், இதற்கான போராட்டத்தை முன்னெடுத்து ஆதரிப்பதாக தெரியவந்திருக்கிறது.
இதற்கு முன்பாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று அம்மாநிலத்தின் ஆளும் கட்சியாக உள்ள பாஜக அரசு மாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்துப் பேசிய இமாச்சலப் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் விபின் சிங் “நாட்டின் பல்வேறு நகரங்கள் வரலாற்றுப் பெயர்களால் அழைக்கப்பட்டுவந்தன. ஆனால், அவை மாற்றப்பட்டுவிட்டன. அவை பழைய பெயர்களுக்குத் திரும்புவதில் தவறில்லை. சிம்லாவின் பெயரை சியாமளா என்று மாற்றவேண்டும் என மக்கள் ஆசைப்பட்டால், அதுகுறித்துப் பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஹர்பஜன் சிங், “பெயரை மாற்றவேண்டிய காரணம் என்ன ? அதனால் வளர்ச்சி அதிகரிக்குமா ? பெயர் மாற்றப்பட்டால் நகரம் அதன் தன்மையை இழந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரிடிஷ் காலத்தில் கோடைகால தலைநகரமாக 1864-ல் சிம்லா அறிவிக்கப்பட்டிருந்தது. சியாமளா எனும் பெயர் பிரிட்டிஷாரால் சரியாக உச்சரிக்கமுடியாததால் சிம்லா என்று பெயர் மாற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.