சாலை விபத்தில் காயமடைவோருக்கு மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சையளிப்பது தொடர்பான புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு வகுத்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் லட்சக்கணக்கான சாலை விபத்துகளில் சிக்கி சுமார் 1.5 லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் விபத்தில் காயமடைவோருக்கான சிகிச்சைக்கான செலவுகளைச் செய்வதற்குப் பல குடும்பங்கள் போதிய பணமில்லாமல் தவிக்கும் சூழல் நிலவி வருகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் புதிய திட்டம் ஒன்றைத் தயார் செய்துள்ளது மத்திய அரசு. அதன்படி, விபத்தில் சிக்குபவர்கள் அனைவருக்கும் ரூ.2.5 லட்சம் வரை பணம் எதுவும் இன்றி இலவச சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக மோட்டார் வாகன விபத்து விதியை ஏற்படுத்துமாறு, மாநில போக்குவரத்துச் செயலர் மற்றும் ஆணையர்களுக்குச் சாலை போக்குவரத்து அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும், "மோட்டார் வாகனச் சட்டம், 2019 இன் கீழ் பரிசீலிக்கப்பட்டபடி, மோட்டார் விபத்துக்குள்ளானவர்களுக்குப் பணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு செயல்திட்டத்தைத் தயாரித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி - ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்திற்கான மையமாகச் செயல்படும் தேசிய சுகாதார ஆணையம் நாடு முழுவதும் 21,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் தொடர்பில் இருப்பதால், அந்த அமைச்சகத்தின் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்" என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.