திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) நிறுவனம் ரூ. 3,688.58 கோடி கடன் வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் பேங்க் சார்பில், ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
DHFL நிறுவனத்திற்கு நாட்டின் மூன்றாவது பெரிய பொதுத்துறை வங்கியான, பஞ்சாப் நேஷனல் பேங்க் மும்பையில் உள்ள கார்ப்பரேட் கிளை மூலம் கடன் கொடுத்துள்ளது. இதில் அந்நிறுவனத்தின் செயல்படாத சொத்து கணக்கின் மூலம் மோசடி நடந்துள்ளதாக, இந்திய ரிசர்வ் வங்கிக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் ஒரு லட்சம் கோடி அளவிலான கடன்களை பல்வேறு வங்கிகளில் பெற்றுள்ள DHFL நிறுவனம், அந்த வங்கிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மோசடியின் அளவையும் கண்டறியும் வகையில், அதிகாரிகள் அந்நிறுவனத்தின் ஆவணங்கள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும், ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்ட பிற வங்கிகளும், திவான் ஹவுசிங் ஃபைனான்ஸின் கணக்குகளில் மோசடி நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற நான்காவது மிகப்பெரிய மோசடி இதுவாகும். 2018 ஆம் ஆண்டில் நகை வியாபாரி நீரவ் மோடி சம்பந்தப்பட்ட ரூ.11,300 கோடி மோசடியில் பஞ்சாப் நேஷனல் பேங்க் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.