தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நிறைவுபெற்றது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும் தேர்தல் நடந்தது.
புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 70 வேட்பாளர்கள் உள்பட 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். புதுச்சேரியில் 1,558 வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
கேரளாவிலும் வாக்குப்பதிவு நிறைவு!
கேரளாவில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என 957 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த மாநிலத்தில் 40,771 வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக 31 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் நாட்களில் அடுத்தடுத்த வாக்குப்பதிவு ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ளது.
அதைத் தொடர்ந்து, தமிழகம், அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 02- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.