காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஜெய்பால் ரெட்டி (77 வயது) இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு மனைவியும், மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெய்பால் ரெட்டி சில நாட்களுக்கு முன்பு கச்சிபவுலியில் உள்ள ஆசிய இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட்ரோஎன்டாலஜி மையத்தில் அதிக காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர், 1942 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர் அணி தலைவரானார். அதன் பிறகு 1970 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலை பிரகடனம் விதித்த பின்னர் அவருக்கு எதிராக எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, ரெட்டி ஜனதா கட்சியிலும் பின்னர் ஜனதா தளத்திலும் சேர்ந்தார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒளிபரப்பு அமைச்சராகவும், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும், மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராகவும் பதவி வகித்தார். அதே போல் மக்களவைக்கு நான்கு முறையும், மாநிலங்களவைக்கு மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.