உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவிடம் ஆன்-லைன் மூலம் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் காவல்துறையினரிடம் நேற்று புகார் அளித்தார்.
நீதிபதி லோதாவும், ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி.சிங் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஓய்வுக்கு பின்னரும் தொலைபேசியிலும், மின்னஞ்சல் வழியாகவும் தொடர்ந்து பேசி வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி இரவு 1.40 மணிக்கு லோதாவுக்கு அவரின் நண்பர் பிபி சிங் பெயரில் மின் அஞ்சல் வந்தது.
அந்த மின்அஞ்சலில் தன்னுடைய உறவினர் ஒருவரின் மருத்துவச் செலவுக்கு அவசரமாக ரூ.1 லட்சம் தேவைப்படுவதாகவும், தொலைபேசியில் பேச முடியாத சூழலில் இருப்பதால் பணத்தை மருத்துவரின் வங்கிக்கணக்கில் செலுத்திவிடுமாறு வங்கிக்கணக்கையும் தெரிவித்திருந்தார். மறுநாள் நீதிபதி லோதா ரூ.1 லட்சம் பணத்தை அந்த குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் சேர்த்துள்ளார். இதன் பின்னரே பிபி சிங்கின் மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டது லோதாவுக்கு தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் 18 ம் தேதி முதல் ஓய்வுபெற்ற நீதிபதி பிபி சிங்கின் மின்அஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு செயல்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப்பின் கடந்த மாதம் 30-ம் தேதிதான் அந்த மின் அஞ்சல் மீண்டும் பிபி சிங்கின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, டெல்லி மாளவியா நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் துணை ஆணையர் மற்றும் சைபர் பிரிவு போலீஸாரிடமும் லோதா புகார் அளித்தார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியிடமே ஆன்லைன் மூலம் ஏமாற்றியது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.