மத்திய அரசு தமது செலவுகளை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
பிடிஐ -க்கு பேட்டியளித்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், "இந்திய பொருளாதாரத்தில் நம்பிக்கை தரும் சில அம்சங்கள் இருந்தாலும், கவலைத் தரக்கூடிய பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. பெரிய நிறுவனங்களின் லாப விழுக்காடு நன்றாக இருப்பது, மென்பொருள் துறைகள் சிறப்பாகச் செயல்படுவது, புத்தாக்க நிறுவனங்கள் அதிகரிப்பது உள்ளிட்டவை இந்திய பொருளாதாரத்தில் நம்பிக்கை தரும் அம்சங்கள் ஆகும். அதே வேளையில், வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு, நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பது, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நிதிச் சிக்கலைச் சந்தித்திருப்பது உள்ளிட்டவை கவலைத் தரும் அம்சங்கள் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வுப்பெற்றுள்ள ரகுராம் ராஜன், தற்போது அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.