இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும், அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த குழுவானது விசாரணை செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இந்தப் போராட்டம் தற்போது 8வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா போராட்டத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் பி.டி.உஷாவின் கருத்திற்கு எதிராகவும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பலவேறு விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக, “நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்கள் தேசியக் கொடியேற்றி நம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்கள் இன்று வீதிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த மிக முக்கியமான பிரச்சனையை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும். வீரர்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என ட்விட் செய்துள்ளார்.