Skip to main content

“கொரோனாவில் பாதிக்கப்பட்ட போட்டித் தேர்வர்களுக்கு வயது வரம்பு தளர்வு வேண்டும்” - கனிமொழி எம்பி வலியுறுத்தல்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

“Age limit should be relaxed for competitive candidates affected by Corona” - Kanimozhi speech in Lok Sabha

 

கொரோனா ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மத்திய அரசின் போட்டித் தேர்வர்களுக்கு வயது வரம்பினைத் தளர்த்த வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்பி கனிமொழி பேசியுள்ளார்.

 

மக்களவையின் நேரத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி பேசியதாவது.. "மத்திய அரசு நடத்தும் குடிமைப்பணித் தேர்வான யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி, மற்றும் வங்கி ஆகிய போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் முறைப்படி கோரிக்கை மனுக்களை அனுப்பியும் அவற்றை கவனித்து அவர்களுக்கு உதவவில்லை . 

 

குறிப்பாக, மாணவர்கள் கூடுதல் நெருக்கடிகளை சந்தித்தார்கள். அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியானது. பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழு, ‘ஊரடங்கால் வாய்ப்பை இழந்த மத்திய அரசின் தேர்வெழுதும் இளைஞர்களுக்கு கருணை அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகளைக் கொண்டு வரவேண்டும். கூடுதலாக ஒரு முறை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால் அரசு அதை நிராகரித்துவிட்டது.

 

இந்த அவையில் தெரிவித்த பதிலில் அதுபற்றி பரிசீலனையிலேயே இல்லை என்று அரசு தெரிவித்துவிட்டது. இத்தகைய போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஒரு வருடத்துக்கு ஒரு மாணவருக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது. குறிப்பாக இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இத்தகைய தேர்வுகளுக்கு தயாராவதற்கு தம் குடும்பச் சூழலால் செலவுகள் அதிகம்.

 

ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு ஊரடங்கால் தேர்வு எழுதும் வாய்ப்புகளை இழப்பது என்பது அவர்களின் வாழ்க்கையில் பெரும் பிரச்சினையாகி விடுகிறது. ஊரடங்கு காரணமாக தேர்வு எழுதும் உரிமை வயது வரம்பின் பெயரில் பறிக்கப்படக்கூடாது. எனவே, அம்மாணவர்களுக்கு வயது வரம்பை தளர்த்தி தேர்வு எழுத வாய்ப்பளிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசினார்.

 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து பேச UPSC COVID-19 Extra Attempt Movement சார்பாக சிலம்பரசன் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது...

 

கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பல பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மருத்துவர்கள் போன்ற முன்னணி பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அனுதாப அடிப்படையில் கூடுதல் முயற்சியை வழங்குமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனாலும் இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இந்த வருட ஜூலை மாதத்தில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போட்டித் தேர்வர்கள் அங்கே கூடினார்கள். அவர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் நேரடியாகவே பாதிக்கப்பட்ட கோயம்புத்தூரைச் சேர்ந்த செண்பகம் என்ற போட்டித் தேர்வர் கொரோனா ஊரடங்கு காலத்தில் கொரோனா தாக்கப்பட்டு நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி அதனால் கருவுற்றிருந்த இரட்டைக் குழந்தைகளும் இறந்துபோன சூழ்நிலையில் போட்டித் தேர்வினை எழுத முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இன்னும் ஒரு முறை போட்டித்தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

 

மத்திய அரசு இவர்களது கோரிக்கையை ஏற்று வயது வரம்பினைத் தளர்த்தி மீண்டும் ஒரு முறை போட்டித் தேர்வுகளை எழுதும் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்பதே இந்தியாவெங்கும் இருக்கும் குடிமைப்பணித் தேர்வு எழுதுபவர்களின் கோரிக்கையாக உள்ளது.


 

சார்ந்த செய்திகள்