பீஹார் மாநிலத்தில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார். துணை முதல்வராக பாஜக சார்பில் சுஷில் குமார் மோடி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பீஹார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம்- 16 இடங்களையும், பாஜக கட்சி 17 இடங்களையும் கைப்பற்றியது. நாடு முழுவதும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சி தனித்தே 303 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.
இவருடன் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த அமைச்சர்கள் பட்டியலில் ஐக்கிய ஜனதா தள எம்பிக்கள் இடம் பெறுவார்கள் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பீகார் மாநில லோக் ஜன சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு மட்டும் கேபினட் அமைச்சர் பதவியை பாஜக வழங்கியுள்ளதால், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து பீகார் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் பாஜக எம்எல்ஏக்கள் ஒருவருக்கு கூட அமைச்சரவையில் இடமளிக்கவில்லை. இதற்கு ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர்கள் நிதிஷ் மற்றும் பாஜக கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே நிதிஷ் குமார் காங்கிரஸ் கட்சி தலைமையிலான தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதல்வர் சித்தன் ராம் மாஞ்சி நேற்று பாட்னாவில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். அதில் பீஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், எதிர்க்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சித்தன் ராம் மாஞ்சி அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகைவரும் இல்லை என்றார். ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவர் ரகுவன் பிரசாத் சிங் கூறுகையில் நிதிஷ்குமார் " எங்கள் கூட்டணி வர அதிக வாய்ப்புள்ளது. அவர் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். அவர் எங்கள் அணிக்கு வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என தெரிவித்தார்.