இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்தாலும் கேரளாவில் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 13,550 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 104 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனால் மாநிலத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், உயிரிழந்தவர்கள் உடல்களை கேரள மாநில அரசே அடக்கம் செய்வதால், உயிரிழந்த நபர்களின் உறவினர்களும் குடும்பத்தினரும் மன அழுத்தம் அடைவதாக தொடர்ந்து அரசாங்கத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதுதொடர்பாக கேரள மாநில அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை இனி வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் வைக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களில் இத்தகைய அனுமதி ஏதும் வழங்கப்படாத நிலையில் கேரளாவில் முதல்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.