உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் (வயது 89), ரத்த தொற்று நோய் காரணமாக கடந்த ஜூலை மாதம் 4- ஆம் தேதி அன்று லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (21/08/2021) இரவு கல்யாண் சிங் காலமானார்.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கல்யாண் சிங், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். கடந்த 1992- ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரபிரதேசத்தின் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தவர் கல்யாண் சிங் என்பது குறிப்பிட்டத்தக்கது.
கல்யாண் சிங் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு மாநில ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "படிப்படியாக உயர்ந்த தலைவர் கல்யாண் சிங், சிறந்த மனிதர், ராஜதந்திரி, நேர்த்தியான ஆட்சியாளர்" புகழாரம் சூட்டியுள்ளார்.