
கரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) காலமான நிலையில் இறுதி மரியாதை நிகழ்வு தற்பொழுது துவங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கரோனா பாதிப்பு காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், சுமார் ஒரு மாதமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று (06/02/2022) காலை 08.12 மணிக்கு மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கரின் உடல் இறுதிப் பயணத்திற்குத் தயாராகிவிட்டது. பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் அவரது உடலுக்கு அரசு மரியாதை உடன் இறுதி மரியாதை செலுத்தப்பட இருக்கிறது.

பிரதமர் மோடி நேரில் அவரது உடலுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மோடி ஆறுதல் கூறினார். இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷியாரி, கோவா முதல்வர் பிரமோத், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சரத்பவார், சச்சின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.