ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிக்கை வெளியிட மத்திய அமைச்சகம் உத்தரவு!
உலக அளவில் அதிக ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவில் இறக்குமதியாகும் ஸ்மார்ட்போன்களின் நம்பகத்தன்மை குறித்த அறிக்கையை, வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு முன்பாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சமர்ப்பிக்க மத்திய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
சீனா இந்தியா இடையே எல்லைப் பிரச்சனை மிகப்பெரிய விவகாரமாக நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சீனப்பொருட்களைப் பயன்படுத்தக் கூடாதென செய்திகள் பரவிவருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும், அன்றாடத் தேவைகள் மற்றும் சேவைகளை டிஜிட்டலாக மாற்றப்பட்டு வரும் இந்த சூழலில், அவர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு மொபைல் நிறுவனங்களால் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இதுமாதிரியான ஸ்மார்ட்போன்களில், அவற்றின் நிறுவனங்களால் மக்களைக் கவரும் வகையில், மின்கூட்டியே கொடுக்கப்படும் அப்ளிகேஷன்கள் மற்றும் ப்ரவுசர்கள் உள்ளிட்டவற்றின் நம்பகத்தன்மை குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் செல்போன் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ளார். இந்த நிறுவனங்களின் பாதுகாப்பு விளக்க அறிக்கைகள் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு முன்பு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் சமர்பிக்கப் படவேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்