ஆன்லைன் மூலமாக யாருடன் வேண்டுமானாலும் 3டி தெழில்நுட்பத்துடன் கலந்துரையாடும் வகையிலான ஜியோ க்ளாஸை அறிமுகம் செய்ய உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
ரிலையன்ஸ் நிறுவன 43 ஆவது வருடாந்திர கூட்டத்தில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் தயாரிப்புகள் குறித்து ரிலையன்ஸ் குழும தலைவர் கிரண் தாமஸ் பேசினார். அப்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'ஜியோ க்ளாஸ்' குறித்த செயல்விளக்கத்தை அவர் அளித்தார். கலப்பு ரியாலிட்டி அடிப்படையில் இயங்கும் ஸ்மார்ட் க்ளாஸான 'ஜியோ க்ளாஸ்' 25 செயலிகள் பயன்பாட்டையும், HD தர வீடியோவையும் வழங்குகிறது. ஹாலோகிராம் எனப்படும் 3டி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட இந்த கண்ணாடி மூலம் எந்த நேரத்தில், உலகின் எந்த மூலையில் இருபவருடனும், முப்பரிமாண தளத்தில் உரையாட முடியும்.
இதன் பயனர்கள் மற்றவர்களுடன் காணொளிக்காட்சி மூலமாக தொடர்பு கொள்ளலாம், அவர்கள் அவர்களுடைய 3டி அல்லது வழக்கமான 2டி வீடியோ அழைப்பு வடிவத்திலோ அந்த காணொளிக்காட்சி அழைப்பில் கலந்துகொள்ளலாம். மேலும், ஒரு மாபெரும் மெய்நிகர் திரையில் அலுவலக கூட்டங்கள் தொடர்பான தகவல்களையும் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள முடியும். இதுமட்டுமல்லாமல், ஜியோ க்ளாஸ் குரல் கட்டளைகள் (Voice Command) மூலமும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் எப்போது அறிமுகமாகும் என்பன குறித்த தகவல்களை ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.