இமாச்சலப்பிரதேசத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான மற்றும் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இமாச்சலின் மணாலிக்கும், லடாக்கின் லே பகுதிக்கும் இடையேயான 46 கிலோமீட்டர் தூர பயணத்தை குறைக்கும் வகையில் கடந்த 2000 ஆவது ஆண்டு, வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு இந்த சுரங்கப் பாதையை அமைக்க திட்டம் வகுத்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கு அடிகள் நாட்டப்பட்ட நிலையில், அதன்பிறகு இதுதொடர்பான பணிகள் துவங்கப்படாமலேயே இருந்தன. இந்நிலையில், நீண்ட கால இழுபறிக்கு பின்னர் 2010 ஆம் ஆண்டு இதன் கட்டுமான பணிகள் துவங்கின.
ஆஸ்திரிய நாட்டின் தொழில்நுட்ப அடிப்படையில் ரூ.4,000 கோடி மதிப்பில் இதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை 9.02 கி.மீ. நீளம் கொண்டது. எட்டு மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்ட இருவழிப்பாதையில், நாள் ஒன்றுக்கு 3,000 கார்கள் மற்றும் 1,500 லாரிகள் செல்ல முடியும்.
இந்த சுரங்கப்பாதையில் அவசர தகவல்தொடர்புக்காக ஒவ்வொரு 150 மீட்டருக்கும் தொலைபேசி இணைப்பும், ஒவ்வொரு 60 மீட்டருக்கும் தீயணைக்கும் அமைப்புகளும், ஒவ்வொரு 250 மீட்டருக்கும் சி.சி.டி.வி கேமராக்களும், ஒவ்வொரு கி.மீ.க்கும் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த சுரங்கப்பாதையைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.