மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், 22ஆம் தேதி இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.
இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார். இதனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் மனு தாக்கல் செய்தன. இதில் இன்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், மஹாராஷ்டிராவில் நாளை (27-11-19) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அறிவித்தது.
இந்த சூழலில் அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத், "அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார், அவர் எங்களுடன் தான் இருக்கிறார். உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதல்வராக அடுத்த 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்" என்றார்.