17 ஆண்டுகாலமாக காணாமல்போன மகனை தேடிவந்த தந்தை கடைசிவரை குழந்தையின் முகத்தைப் பார்க்காமலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் சிபிஐ போலீசார் விசாரித்தும் கூட காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் வருந்தத்தக்க செய்தி.
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மினி. இவர்களுக்கு ராகுல் என்ற மகன் இருந்தான். மகன் மீது பேரன்பு வைத்திருந்த பெற்றோர் 'ராகுல் நிவாஸ்' என்ற பெயரில் வீட்டையும் கட்டியிருந்தனர். ராஜு குவைத் நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி வீட்டுக்கு அருகே இருந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ராகுல் காணாமல் போனார். இந்த தகவலை கேள்விப்பட்ட ராஜு அடுத்தநாளே இந்தியாவிற்குத் திரும்பி, இதுதொடர்பாக மகனை கண்டுபிடித்துத் தரவேண்டும் என போலீஸில் புகார் அளித்தார். ஒருபக்கம் பெற்றோர் தரப்பிலும் குழந்தை தேடப்பட்டது.
கேரள போலீசார், கேரள புலனாய்வுத்துறை என அனைத்து தரப்பிலும் காணாமல்போன குழந்தை தேடப்பட்ட நிலையில், கடைசியில் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் காணாமல்போன ராகுலை தேடி வந்தனர். ராகுல் காணாமல் போன பிறகு இவர்களுக்கு சிவானி என்ற பெண் குழந்தையும் பிறந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை என வழக்கை சிபிஐ முடித்துக் கொண்டது. இதற்கான அறிக்கையை கொச்சி நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்தது. சிபிஐயின் அறிக்கையை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. கேரள வரலாற்றில் இந்த வழக்கு மிகவும் மர்மம் நிறைந்த வழக்காக தற்பொழுத வரை இருக்கிறது. மகன் காணாமல் போனது தந்தை ராஜுவின் மனநிலையைச் சேதப்படுத்திய நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த ராஜு மீண்டும் குவைத்துக்கு வேலைக்குச் சென்று உடல்நலம் சரியில்லாமல் மீண்டும் தாய்நாடு திரும்பினார். இந்தநிலையில் 17 ஆண்டுகளாக காணாமல்போன தனது மகனின் முகத்தை பார்க்க முடியாமல் தவித்து வந்த ராஜு, கடந்த 22ஆம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல வினோத வழக்குகளைச் சந்தித்துவரும் கேரள மக்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது இந்த செய்தி.