நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தொழில்துறை வளர்ச்சிக் கழகத் தலைவருமான ரோஜாவை விவசாயிகள் முற்றுகையிட்டதால் சுமார் ஒருமணிநேரம் வரை ரோஜா காருக்குள்ளேயே அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது.
ஆந்திர அரசு அம்மாநிலத்திற்கு மூன்று தலைநகர் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதனை அமராவதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், அமராவதியில் நீருகொண்டா பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த ரோஜாவை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டனர். ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் வேண்டாம், அமராவதியே நிரந்தர தலைநகரமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கோஷமிட்டனர். இந்த முற்றுகை காரணமாக சுமார் ஒரு மணிநேரம் ரோஜா அப்பகுதியில் சிக்கித்தவித்தார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, "தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சமூக விரோதிகளை சந்திரபாபு நாயுடு கட்டவிழித்து விட்டுள்ளார். மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதாலேயே ஜெகன்மோகன், 3 பகுதிகளில் தலைநகரங்களை அமைக்க வேண்டுமென கூறியுள்ளார். அமராவதியில் சந்திரபாபு நாயுடு சுமார் 4,000 ஏக்கர் நிலத்தை பினாமி பெயர்களில் வாங்கி குவித்துள்ளார்.அதனால்தான், தற்போது தலைநகரை மாற்றப்போகிறோம் என அறிவிப்பு வந்த உடன், சந்திரபாபு நாயுடு பதற்றமடைந்துள்ளார்" என தெரிவித்தார்.