யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கமாட்டோம் என்ற முதல்வர் ரங்கசாமியின் வாக்குறுதி ஏற்று வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் பொதுமக்களை பற்றி கவலைப் படாமல் நோயாளிகளைப் பற்றி கவலைப்படாமல் சிலர் செய்த பிரச்சனைகளால் மின்சாரம் தடைபட்டது. அரசாங்கம் உடனடியாக செயல்பட்டு அதை சரி செய்து விட்டது. எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் நேர் வழியில் அறவழியில் போராட வேண்டும். அரசாங்கம் எந்த முடிவெடுத்தாலும் மக்களின் நன்மைக்காக தான் முடிவெடுக்கும்.
தனியார் மயமாக்கல் என்ற உடன் முழுவதுமாக எடுத்து யாரிடமோ கொடுப்பது போல் ட்விட்டர், முகநூலில் போடுகின்றனர். அப்படி இல்லை. பல துணைநிலை மாநிலங்களில் தனியார் மயமாக்கலால் பொதுமக்களுக்கு மிகுந்த லாபம் கிடைத்துள்ளது. குறிப்பாக மின்கட்டணம் வேண்டிய அளவிற்கு மேல் அதிகமாக குறைக்கப்படும். அதுமட்டுமல்ல மின் திருட்டு குறைக்கப்பட்டு மின் சேமிப்பு அதிகப்படுத்தப்படுவதால் இன்னும் சிறப்பாக மின்சாரம் கிடைக்கும்.
ஒரு சாராருக்கு கெடுதல் ஏற்படுத்திவிட்டு ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அரசாங்கத்திற்கு நோக்கம் கிடையாது. மக்களின் நலன் சார்ந்த முடிவுதான் மின்சார துறை எடுத்திருக்கின்ற முடிவு. மின் கட்டணம் குறையும், மின் திருட்டு தடுக்கப்படும், மின் சேமிப்பு அதிகரிக்கும். இன்னும் சொல்லப்போனால் புதுவை மாடல் தான் உயர்ந்த மாடலாக இருக்கப் போகிறது.
ராஜ ராஜ சோழன் இந்து அல்ல எனக் கூறி நெடுங்காலமாக தமிழகத்தில் கலாச்சார அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருக்கிறது. தமிழுக்கு என்று உள்ள கலாச்சார அடையாளங்கள் மறைக்கப்படுவது என்றால் எல்லோரும் எதிர்த்து குரல் கொடுப்போம் என்பது தான் எனது கருத்து. ஏற்கனவே பல அடையாளங்களை மறைத்துவிட்டார்கள். இந்து என்பது கலாச்சார அடையாளம். தமிழர்களின் அடையாளம் இறைவழிபாடு. அவர்கள் கலாச்சாரத்தோடு வாழ்ந்தார்கள். இனிமேலும் அடையாளங்களை மறைக்க முற்பட்டால் அது சரியாக இருக்காது” எனக் கூறியுள்ளார்.