இந்தியா - பாரத் எனத் தொடர்ந்து நம் நாட்டின் பெயர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஜி20 மாநாட்டில் பிரதமருக்கு முன்பு இருந்த பெயர்ப் பலகையில் ‘பாரத்’ என இருந்தது. இது மீண்டும் பேசுபொருளானது. முன்னதாக இந்த விவாதம் துவங்கிய நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நாட்டின் பெயரை பாரத் என மாற்றப்போவதாகப் பரவும் தகவல் வதந்தி என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரபல டெலிவரி நிறுவனமான புளூ டார்ட் தனது பிரீமியம் டெலிவரி சேவையை இந்தியாவில் ‘டார்ட் பிளஸ்’ -இல் இருந்து ‘பாரத் டார்ட்’ என மாற்றுவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ப்ளூ டார்ட் நிறுவனம், “இந்த வியூக மாற்றம் ப்ளூ டார்ட்டின் பயணத்தில் முக்கிய மைல் கல்லைக் குறிக்கிறது. ப்ளூ டார்ட் பாரதத்தின் பல்வேறு தேவைகளுக்கு சேவை செய்வதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. ப்ளூ டார்டின் இந்த பெயர்மாற்ற முடிவு, விரிவான ஆராய்ச்சி செயல்முறைக்கு பின்னரே, அதன் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப தன்னை இணைத்துக் கொள்வதன் நோக்கமாக உருவானது.
தொடர்ந்து, பாரதத்தில் எக்ஸ்பிரஸ் தளவாடங்களை மறுவரையறை செய்ய 'பாரத் டார்ட்' தயாராக உள்ளது. இந்த சேவை அனைத்து வணிகங்களுக்கும் ஒப்பிட முடியாத வேகத்தையும், பாதுகாப்புடன் ஆதரவையும் வழங்குகிறது. இந்தியாவை உலகத்துடனும், உலகை பாரதத்துடனும் இணைக்கும் ப்ளூ டார்ட் நிறுவனம் தொடர்ந்து மாற்றத்திற்கான பயணத்தில் உள்ளது. எனவே அனைத்து பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இனைந்து செயல்பட வேண்டும்" எனவும் கூறியுள்ளது.
இது குறித்து, புளூ டார்ட்டின் நிர்வாக இயக்குநர் பால்ஃபோர் மானுவல் கூறுகையில், “பரந்து விரிந்த இந்த நாட்டிலுள்ள பகுதிகளுக்கு நாங்கள் தொடர்ந்து டெலிவரி செய்து வருவதால், இந்த மறுபெயரிடுதல் எங்களுக்கு ஒரு அற்புதமான மாற்றத்தை, பிரதிபலிப்பை அளித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்த பெயர் மாற்ற அறிவிப்பிற்குப் பிறகு ப்ளூ டார்டின் பங்கு 2 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.