நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் பிரதமர் மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 7 ஆவது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1 இல் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உடன் இருந்தனர். 3 வது முறையாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிர்த்து வாரணாசியில் காங்கிரஸ் கட்சி சார்பில், உத்திரப் பிரதேச மாநிலத் தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார். கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களில் பிரதமர் மோடிக்கு எதிராக அஜய் ராய் போட்டியிட்டு, தோல்வியடைந்த நிலையில் மீண்டும் இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடப் போவதாக பிரபல நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான ஷ்யாம் ரங்கீலா (28) அறிவித்திருந்தார்.
பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை போல் மிமிக்ரி, செய்து பலரது கவனத்தை பெற்ற இவர், பிரதமர் மோடியை எதிர்த்து பல விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனையடுத்து, அவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்குவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறிய போது, “சூரத், இந்தூர் தொகுதிகள் போல் எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமல், பிரதமர் மோடி வெற்றி பெற்றுவிடக்கூடாது. 2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசி வந்தேன். ஆனால், 10 ஆண்டுகளில் நிலைமை தலைக்கீழாக மாறிவிட்டது. இதனால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட உள்ளேன்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஷ்யாம் ரங்கீலா நேற்று (14-05-24) பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர், அவர் வெற்றிகரமாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.