புதுச்சேரியில் கரோனா நடைமுறைகளைக் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளர் சி.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா விதிமீறல் ஈடுபடுபவர்களை தமிழக அரசு வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து அபராதம் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் புதுவையில் காவல்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச்சுமையாக மாஸ்க் அணியாமல் செல்பவர்களை, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 நபர்களுக்கு அந்தந்த காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அபராதம் விதிக்க வேண்டுமென்று உயரதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் காவல் நிலைய பணிகளில் தேக்கம் ஏற்படுகிறது.
ஒருபக்கம் வழக்கமான சட்டம்- ஒழுங்கு காவல் பணியில் ஈடுபட வேண்டி உள்ளது. இன்னொரு பக்கம் கரோனா விதிமுறை மீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இது காவல்துறையில் உள்ள நபர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரித்துள்ளது. மேலும் பல காவல்துறையினர் மனவேதனையில் உள்ளதாகக் கூறுகின்றனர்.
தமிழகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்யும்போது புதுவையில் மட்டும் கூடுதலாக காவல்துறைக்கு பணிச்சுமை கொடுப்பது கண்டனத்துக்குரியது. அதேபோல் இந்நாள்வரை வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. புதுவை அரசு உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்டு கரோனா நடைமுறைகளில் ஈடுபடுவதற்கான பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவை அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.