இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் மின்சார திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மின்சார திருத்த மசோதா, வாடிக்கையாளர்கள் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து தொலைத்தொடர்பு சேவையைப் பெறுவது போல், நுகர்வோர் பல்வேறு மின்னுற்பத்தி நிறுவனங்களிடமிருந்து சேவையைப் பெற வழி செய்துள்ளது. மின் விநியோகத்திற்கு உரிமம் வழங்குவதையும் இந்த மின்சார திருத்த மசோதா ரத்து செய்ய வழி செய்கிறது.
இந்த மின்சார திருத்த மசோதாவிற்கு ஏற்கனவே மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிவசேனாவும் இந்த திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் இந்த சட்டம் குறித்து கூறுகையில், "இந்த மின்சார திருத்த மசோதாவில், மாநில மின்சார நிறுவனங்கள் மோசமாகப் பாதிக்கப்படும். இந்த திருத்த மசோதாவில் உள்ள விதிகளை மத்திய அரசு, மாநிலங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களோடு விவாதிக்கவில்லை" எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும் அவர், "இந்த மின்சார திருத்த மசோதா விதிமுறைகள், மாநில மின்சார வாரியங்களுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. எங்களது கட்சி இந்த மசோதா குறித்து ஆலோசிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.