ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது ''உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும். மக்கள் பாஜகவிற்கு ஆதரவளிப்பர் என்பதால் ஐந்து மாநிலத்திலும் கண்டிப்பாக ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை பாஜக நம்புகிறது. நான் முதலமைச்சராக இருந்துள்ளதால் மாநிலங்களின் தேவையை சரிவர அறிந்து அதற்காகச் செயலாற்றுகிறேன். மாநிலங்களை ஊக்குவிக்கவே வெளிநாட்டுத் தலைவர்களை ஒவ்வொரு மாநிலத்திற்கும் அழைத்துச் செல்கிறேன்.
சீன அதிபரை தமிழ்நாட்டுக்கும், பிரான்ஸ் அதிபரை உ.பி மாநிலத்திற்கும் அழைத்துச் சென்றோம். நாட்டை துண்டாட நினைக்கும் எதிர்க்கட்சிகளின் வலையில் மக்கள் சிக்க மாட்டார்கள். உலகின் மிக மூத்த மொழியாக தமிழ் திகழ்கிறது என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். சமூகநீதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினருக்குமான திட்டங்களை தீட்டி வருகிறோம். தமிழ்நாடு, ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் குடும்ப அரசியல் நடத்தப்படுகிறது. பல தலைமுறைகளாக கட்சியை ஒற்றை குடும்பமே நிர்வகித்து வரும் முறைதான் நமது ஜனநாயகத்திற்கு எதிரானது'' என்றார்.