காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற பெயரில் புதிதாக கட்சி தொடங்கி அதன் தலைவராக இருந்து வருபவர் குலாம் நபி ஆசாத். இவர் தற்போது எழுதி வரும் சுயசரிதையை விரைவில் வெளியிடவுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்ப ஒரு போதும் தவறியது கிடையாது. பிரதமர் மோடி மற்றும் அவரின் அமைச்சரவை மீது பலமுறை மோசமான விமர்சனங்களை நான் சுமத்தி இருக்கிறேன். அனைத்தையும் கூர்ந்து கவனிக்கும் மோடி ஒரு முறை கூட கடும் வார்த்தைகளால் பதிலளித்தது இல்லை.
மோடி என்னை பாராட்டிப் பேசியதை விமர்சனம் செய்பவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே எந்த விவாதமுமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது வேதனையளிக்கிறது. இதனை எதிர்க்கட்சி தலைவர்களே அனுமதிக்கிறார்கள் என்பது தான் இன்னும் ஆச்சரியமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி தான் இன்னும் ரிமோட் மூலம் இயக்கி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தான் தலைவர். மல்லிகார்ஜுன கார்கே அல்ல. எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பேன் என்று தேர்தலுக்கு முன்பு உறுதியாக கூற முடியாது" என்று கூறியுள்ளார்.