நேஷ்னல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு ஆளும் மத்திய பா.ஜ.க அரசு அமலாக்கத்துறை மூலம் சம்மன் அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று (21/07/2022) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில் மத்திய பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், காங்கிரஸ் தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக் கோரியும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இந்திராகாந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், புதுச்சேரியில் இருந்து கடலூர், சென்னை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இவ்வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன. அப்போது மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைத் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் உட்பட 300- க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "எதிர்க்கட்சிகளின் பலத்தையும், மரியாதையும் சீர்குலைக்கும் வகையில் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருகிறது. ஆதாரம் இல்லாத ஒரு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரிப்பது பழிவாங்கும் நடவடிக்கை. குற்றமற்றவர்கள் என்று இருவரும் நிரூபிக்கும் போது மோடியின் முகத்திரை கிழிக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ உள்ளது. விலைவாசிகள் உயர்ந்துள்ளது. இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இவைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து அதிகாரபலம் மற்றும் பணபலத்துடன் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. தயிர், பால் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பொருட்களின் மீது வரி சுமத்தி மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் பா.ஜ.க.வின் ஆட்சி விரட்டப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை" எனத் தெரிவித்தார்.