கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்து பக்தர்கள் தெறித்து ஓடிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பூரம் திருவிழா என்பது மிகவும் விமரிசையானது. கேரளப் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் யானைகள் ஊர்வலம் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. அண்மைக்காலமாகவே திருவிழாக்களில் பங்கேற்கும் யானைகளுக்கு மதம் பிடிப்பது உள்ளிட்ட செயல்களால் பதற்றம் ஏற்படுவது வழக்கம்.
இதன் காரணமாக கேரளாவில் திருவிழா நேரங்களில் யானை ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் யானை பாதுகாப்பு படையினர் என்ற அமைப்பு கண்காணிப்பிற்காக நிறுத்தப்படுகிறது. இந்த நிலையில் பாலக்காடு மாவட்டம் சாலச்சேரி முளையம்பரம்பத்துக்காவு என்ற கோவிலில் பூரம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருவிழாவில் பங்கேற்க அலங்காரம் செய்யப்பட்டு யானைகள் அணிவகுத்து வந்தன. அதில் ஒரு யானைக்கு திடீரென மதம் பிடித்தது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த யானை பாதுகாப்புப் படை வீரர்கள் பாகங்களோடு இணைந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திடீரென யானைக்கும் மதம் பிடித்ததால் அந்தப் பகுதி இருந்த மக்கள் தலைதெறித்து ஓடினர். இந்த சம்பவத்தில் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் யானையானது மீட்கப்பட்டு அந்த இடத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டது.