ஆந்திரா பலமனேரி வனப்பகுதியை ஒட்டி விவசாயி செங்கல்நாயுடு என்பவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தில் காட்டு விலங்குகள் அடிக்கடி நிலத்துக்குள் வந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கை. அதனை தடுக்க செங்கல்நாயுடு, தனது நிலத்துக்கும் வனப்பகுதிக்கும் இடையே இரும்பு வேலி அமைத்திருந்துள்ளார். டிசம்பர் 1ந்தேதி இரவு அந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது.
டிசம்பர் 2ந்தேதி காலை செங்கல்நாயுடுவின் நிலத்தில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனைப்பார்த்து அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியாகியுள்ளனர். இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் கூறியுள்ளனர்.
அவர்கள் வந்து நடத்திய விசாரணையில், செங்கல்நாயுடுவின் நிலத்தில் உள்ள ஒரு மரக்கிளையில் இருந்து உணவுக்காக மரக்கிளையை உடைக்க முயன்றுள்ளது யானை. அப்போது, அந்த கம்பியில் பாய்ச்சியிருந்த மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
விலங்குகள் விவசாய நிலத்தில் வராமல் இருக்க பலதுறைகளிலும் அனுமதி பெற்று குறைந்தளவிலான மின்சாரத்தையே கம்பிவேலிகளுக்கு வைப்பார்கள். அப்படி வைக்கும் முன் அதுப்பற்றி தண்டோரா மூலமாக அறிவிப்பார்கள். பாதுகாப்புக்கு ஆள் இருப்பார்கள். அப்படி எந்த நடைமுறையும் இதில் கடைப்பிடிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பலமனேரி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட அந்த விவசாயி மீது கடும் நடவடிக்கை எடுக்க வனத்துறையும் முடிவெடுத்துள்ளது.