பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று (20/02/2022) மாலை 05.00 மணி நிலவரப்படி, 63.44% வாக்குகள் பதிவாகியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய ஆயுத காவல் படையின் 700 கம்பெனிகளும், மாநில காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலில் மொத்தம் 1,304 வேட்பாளர்கள் களம் கண்டனர். அவர்களில் 93 பேர் பெண்கள் ஆவர். இருவர் மூன்றாம் பாலினத்தவர்.
தேர்தல் விறுவிறுப்பாக நடந்த நிலையில் அமிர்தசரஸ் தொகுதியில் வாக்குப்பதிவு செய்வதற்காக பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும், சிரோன்மணி அகாலிதளம் தலைவரும் ஒரே நேரத்தில் வந்தனர். இருவரும் அமிர்தசரஸ் கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர்.
எனினும், நேரடியான சந்திப்பின் போது, பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மாநில அமைச்சர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் வாக்களித்தனர். ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் மொஹாலியில் வாக்களித்தார். அமிர்தசரஸ் மாவட்டத்தில் உடல் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் சோப்னா மற்றும் மோக்னா ஆகியோர் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர். உடல் ஒட்டி இருந்தாலும் இரண்டு பேரும் தனி வாக்காளர்களாக வாக்களித்தனர். இதனிடையே, வாக்காளர்களை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வாக்குச்சாவடிக்கு செல்லவிடாமல் நடிகர் சோனு சூட்டைத் தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அத்துடன், அவரது வாகனத்தையும் அதிகாரிகள் சிறைப் பிடித்து வைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்த சோனு சூட், பிற வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டினார். நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் மோஹா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.