தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும், ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளை விமர்சித்து வருகின்றன.
அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சி கடந்த 7 ஆம் தேதி எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டிருந்தது. அந்தப் பதிவில், மோடியின் புகைப்படத்தையும் தொழிலதிபர் அதானியின் புகைப்படத்தையும் வெளியிட்டு, ‘பிரதமர் மோடி தொழிலதிபர் அதானிக்காக வேலை செய்கிறார். மக்களுக்காக அல்ல’ என்று குற்றம்சாட்டி பதிவிட்டனர். இது சமூக வலைத்தளங்களில் பரவிப் பேசு பொருளாக மாறியது.
இதனையடுத்து, இது தொடர்பாகக் கடந்த 10 ஆம் தேதி மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாடாளுமன்ற உறுப்பினர் அனில் பலூனி, பா.ஜ.க மூத்த தலைவர் ஓம் பதக் அடங்கிய பா.ஜ.க பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.