16 வது ஐபிஎல் தொடரின் 43 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் களம் கண்டன. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனைத் தொடர்ந்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய லக்னோ அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெங்களூரு அணி லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும் மைதானத்தில் இரு அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றுக் கொள்வது வழக்கம். அவ்வாறு நேற்றைய போட்டியின் முடிவில் இரு அணி வீரர்களும் விடைபெறும்போது பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கும் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல், பெங்களூரு அணி கேப்டன் பாப் டூப்ளசிஸ் மற்றும் இரு அணிகளின் வீரர்களும் கோலி மற்றும் கம்பீர் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஐபிஎல் நிர்வாகமானது விளையாட்டு மைதானத்தில் நடத்தை விதிகளை மீறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி மற்றும் கம்பீருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. மேலும் போட்டியின்போது லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக் பேட் செய்த போது விராட் கோலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.