பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் துரித கதியில் செய்து வருகிறது. கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தேர்தல் ஆணையம் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க, குறிப்பாக தேர்தல் நடைபெறும் பஞ்சாப், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் அதிரடி அரசியல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. உ.பி-யில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பஞ்சாப் தேர்தலில் இதைவிட அதிரடியான பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இதன் ஒரு கட்டமாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர்களுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சட்ட விரோத மணல் எடுப்பு தொடர்பான பண மோசடி வழக்கில் இந்தச் சோதனை நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில் சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கையை அமலாக்கத்துறை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.