மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூரை டெல்லி தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரம் பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், டெல்லியில் ரித்தாலா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மணீஷ் சவுத்ரிக்கு ஆதரவாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரோகிகளை சுட்டு தள்ளுங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் அனுராக் தாகூர் பேசினார். இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் பதிலளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம், அடுத்த அறிவிப்பு வரும் வரை அவரையும், பிரவேஷ் வர்மா-வையும் பா.ஜ.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்தது. இந்நிலையில், அனுராக் தாகூர் அடுத்த 72 மணிநேரங்களுக்கு டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேச கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.