Skip to main content

கரோனாவால் 58 நாட்களில் 645 குழந்தைகள் ஆதரவற்றோர் நிலைக்குத் தள்ளப்பட்டனர் - மத்திய அரசு தகவல்!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

union minister

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி கரோனா உயிரிழப்புகள் மூன்றாயிரத்தைத் தாண்டின. இதில் பல்வேறு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்துள்ளனர். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்குப் பல்வேறு மாநிலங்கள் சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளன.

 

மத்திய அரசும், பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் வைப்புநிதி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தநிலையில், கரோனா இரண்டாவது அலையில் எத்தனை குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றோர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என மாநிலங்களவையில் நேற்று (22.07.2021) கேள்வியெழுப்பப்பட்டது.

 

இதற்குப் பதிலளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கரோனா இரண்டாவது அலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே 28 ஆம் தேதி வரை, 58 நாட்களில் 645 குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றோர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 158 குழந்தைகளும், ஆந்திராவில் 119 குழந்தைகளும், மகாராஷ்டிராவில் 83 குழந்தைகளும், மத்தியப்பிரதேசத்தில் 73 குழந்தைகளும் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றோர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

 

மேலும் அவர், "மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், கல்வித்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து, கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குத் தொடர்ந்து கல்வி வழங்கிடவும், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிடவும் மாநில அரசுகளையும் யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக பிரதமர் மோடி அறிவித்த சிறப்பு உதவித் திட்டமும் தொடரும்" எனவும் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்