Published on 07/09/2019 | Edited on 07/09/2019
இஸ்ரோ மையத்தில் நேற்றிரவு சந்திரயான் - 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் காட்சியினைப் பார்க்க பிரதமருடன் நாடு முழுவதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 60 பேர் வந்திருந்தனர். அப்போது பிரதமர் மோடிக்கும், மாணவர்களுக்கும் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலந்துரையாடலின் போது மாணவர் ஒருவர் பிரதமர் மோடியிடம் பேசும் போது, எனது லட்சியம் இந்தியாவின் குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்பதாகும். அதற்கு நான் எப்படிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மோடியிடம் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு பதிலளித்த மோடி அந்த மாணவனிடம் நீ ஏன் குடியரசுத் தலைவராக விரும்புகிறீர்கள்? நீங்கள் பிரதமராக விரும்பலாமே? என்று பேசினார். இந்த நிலையில் சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' நிலவின் தென் துருவ பகுதியில் 70 டிகிரி கோணத்தில் மான்ஸினஸ்- சிம்பிலியஸ்- எஸ் இடையே உள்ள பள்ளத்தாக்கில் மெதுவாக தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் இருந்த லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது. உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் 2 தரையிறக்கம் தடைபட்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதது அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.