நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார்.
குடியரசுத் தலைவராக பதவி வகித்துவந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பதவியேற்புக்குப் பின் பேசிய திரௌபதி முர்மு, நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் தனக்கு மகிழ்ச்சி எனத் தெரிவித்தார். மேலும், தன்னைத் தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்தார். தன்னுடைய வளர்ச்சி கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும் எனத் தெரிவித்த திரௌபதி முர்மு, நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்கு பணியாற்றுவேன் என்றும் உறுதியளித்தார்.