அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது திரிக்கப்பட்டுப் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி என இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிட்டிருந்தாலும், இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, “சனாதன விவகாரத்தில் அரசியலை கொண்டு வரக்கூடாது; நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சனாதனம் குறித்து எதிராக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். அதன் அர்த்தம் என்ன? இது போன்ற அரசியலை நாங்கள் செய்யவில்லை; நான் அரசியலில் மதத்தை திணிக்க விரும்பவில்லை” என பதிலளித்துள்ளார்.