கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பல பரிமாணங்களில் ஏழையாக உள்ள மாநிலங்களின் பட்டியலை மத்திய நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இந்த ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் பீகார் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தின் 51.91 சதவீத மக்கள் பல்வேறு பரிமாணங்களிலும் ஏழையாக உள்ளனர்.
பீகாருக்கு அடுத்த இடத்தில் ஜார்கண்ட் உள்ளது. அம்மாநிலத்தில் 42.16 சதவீத மக்கள் ஏழையாக உள்ளனர். இந்தப் பட்டியலின் மூன்றாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளது. அம்மாநிலத்தில் 37.79 சதவீத மக்கள் பல பரிமாணங்களிலும் ஏழைகளாக உள்ளனர்.
அதேபோல், பீகாரில்தான் அதிக அளவிலான மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. பீகாரை அடுத்து மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.
அதேநேரத்தில், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏழ்மை குறைவாக இருப்பதாக நிதி ஆயோக்கின் அறிக்கை கூறுகிறது. அந்தப் பட்டியலின்படி கேரளாவில் 0.71 சதவீத மக்கள் மட்டுமே ஏழையாக உள்ளனர். கோவாவில் 3.76 சதவீத மக்களும், சிக்கிமில் 3.82 சதவீத மக்களும், தமிழ்நாட்டில் 4.89 சதவீத மக்களும், பஞ்சாபில் 5.59 சதவீத மக்களும் ஏழ்மையில் இருக்கின்றனர்.