காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.
இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராஜீவ் சுக்லா, ரன்ஜீட் ரஞ்சன், ஹரியானா மாநிலத்தில் இருந்து அஜய் மக்கான், கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஜெய்ராம் ரமேஷ், மத்தியப் பிரதேசத்தில் இருந்து விவேக் தன்கா, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இம்ரான் பிரதாப் கார்ஹி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி, தமிழ்நாட்டிலிருந்து ப.சிதம்பரம் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாதது குறித்து, அதிருப்தி தெரிவித்துள்ள அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தனக்கு ஏன் மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கட்சியில் இணைந்த போது, மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியா காந்தி உறுதி அளித்திருந்தார். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளாகியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவில் இருந்து தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ள இம்ரானைவிட எனக்கு எந்த விதத்தில் தகுதி குறைச்சல். மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.