அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ள நிலையில் குஜராத்தின் குடிசை பகுதிகள் சுவர் எழுப்பி மறைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். இந்த சூழலில், இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு ட்ரம்ப் செல்கிறார்.
அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி ஆகிய இருவரும் திறந்து வைக்கின்றனர். அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார்.
இந்நிலையில், அகமதாபாத்தின் இந்திரா பாலத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வரை உள்ள பகுதியில் சாலையுடன் சேர்த்து தடுப்புச் சுவர் கட்டும் பணியில் அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஈடுபட்டுள்ளது. 6 முதல் 8 ஆதி உயரத்தில் எழுப்பப்படும் இந்த சுவர்கள் சாலையில் இருந்து குடிசை பகுதிகள் தெரியாத வண்ணம் கட்டப்படுகின்றன. சுமார் அரை கிலோமீட்டர் நீளத்திற்கு கட்டப்படும் இந்த சுவர் அமையும் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடிசைகளில் 2500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாஷிங்டனில் அதிபர் ட்ரம்ப் இந்திய வருகை குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிரதமர் மோடியை அதிகமாக விரும்பக்கூடிய சூழல் எனக்கு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் இடம் வரை சுமார் வரவேற்பதற்கு 70 லட்சம் மக்கள் இருப்பார்கள் என்று அவர் என்னிடம் சொன்னார். இன்னும் முழுவதுமாக கட்டிமுடிக்கப்படாத அந்த மைதானம் உலகின் மிகப்பெரிய மைதானம் ஆகும். இது மிகவும் உற்சாகமாக இருக்கப்போகிறது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த நலன்களுக்காக இந்தியா வருகிறார். அவர் இந்திய - அமெரிக்க வர்த்தக மேம்பாட்டிற்காக வரவில்லை. அப்படி இருக்க அவரை வரவேற்க 70 லட்சம் பேர் எதற்கு? அவர் என்ன கடவுளா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.