உத்தரப்பிரதேசத்தின் பண்டா நகரில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது அனைவரையும் காப்பாற்றிய நாய், இறுதியில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் பண்டா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் கீழ் தளத்தில் பர்னிச்சர் செய்யும் தொழிற்சாலையும், அதற்கு மேலே உள்ள இரு மாடிகளிலும் மக்களும் வசித்து வந்தனர். நேற்று இரவு திடீரென பர்னிச்சர் கடையில் தீ பிடித்துள்ளது. குடியிருப்பு பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் தீ பரவுவதை பார்த்து குரைத்துள்ளது.
நாய் தொடர்ந்து குரைப்பதை கேட்ட மக்கள் விழித்து வெளியே வந்து பார்த்துள்ளனர். வெளியே தீ மளமளவென பறி வந்திருக்கிறது. இதனை கண்ட மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே வந்துள்ளனர். குடியிருப்பின் வெளியே வாசல் அருகே கட்டப்பட்டிருந்த நாயை காப்பாற்ற முயற்சி செய்த போது அங்கிருந்த சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் மாட்டிய அந்த நாய் உயிரிழந்துள்ளது.
இது குறித்து அந்த விபத்தில் உயிர் தப்பிய நபர் கூறுகையில், "நாயின் குரைப்புச் சத்தத்தால் 30 பேர் உயிர் பிழைத்தார்கள். ஆனால், நாங்கள் நாயைக் காப்பாற்றுவதற்குள், சிலிண்டர் வெடித்ததில் சிக்கி உயிரிழந்துவிட்டது வேதனை அளிக்கிறது" என கண்ணீருடன் தெரிவித்தார்.