கடுமையான பனிப்பொழிவின் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற வடக்கு மாநிலங்களில் குளிர்காற்று கடுமையாக வீசி வருகிறது. இதனால் சாலையில் மூடுபனி அதிகமாகக் காணப்படுகிறது. மூடுபனியின் அடர்த்தியின் காரணமாகச் சாலையில் செல்லும் வாகனங்கள் மெதுவாகவும் முகப்பு விளக்குகளை எரியவிட்டுக்கொண்டும் செல்கின்றன.
அதே சமயத்தில் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா என நான்கு மாநிலங்களில் குளிர் அலை வீச வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட இந்தியாவில் நிகழும் பனிப்பொழிவின் காரணமாக விமான சேவைகள் அதிகளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்பொழிவின் காரணமாக விமானங்கள் தாமதிப்பதையும் ரத்து செய்யப்படுவதையும் பயணிகளுக்கு உடனடியாக தெரிவிக்க ஏர் இந்தியா நிறுவனம் பயணிகள் சேவை மையத்தை துவக்கியுள்ளது.