புதுச்சேரியின் அனைத்து பகுதிகளும் கடற்கரையையொட்டி உள்ளதால் புயல், கனமழை, வெள்ளம் போன்ற பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதுபோன்ற காலங்களில் சிக்கியிருக்கும் பொதுமக்களை மீட்க புதுச்சேரி மாநில பேரிடர் மீட்பு துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு வீரர்களிடம் பயிற்சி பெற்ற மாநில பேரிடர் மீட்பு குழு என தனியாக உருவாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புயல், கனமழை, வெள்ளம் போன்ற பேரிடர்களில் சிக்கியிருப்பவர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக மாநிலம் முழுவதும் இன்று பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்புத் துறை, காவல்துறை, வருவாய்த் துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
காலாப்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கிய பொதுமக்களை மீட்கும் ஒத்திகை நடத்தப்பட்டது. புகார் வந்ததில் இருந்து ஒவ்வொரு துறையும் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படும் முதலுதவி சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்தும் ஒத்திகை அளிக்கப்பட்டது. இதை தேசிய பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் உண்மை சம்பவம் என நினைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது ஒத்திகை எனத் தெரிந்ததும் அங்கு இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.