இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.
இந்தநிலையில், நேற்று (27.07.2021) எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதன்தொடர்ச்சியாக இன்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில், ராகுல் காந்தி பெகாசஸ் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்ததோடு, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குத் தாங்கள் இடையூறு செய்யவில்லை எனவும், தாங்கள் கடமையைத்தான் செய்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது, “நாங்கள் ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறோம். இந்திய அரசு பெகாசஸை வாங்கியதா இல்லையா? அரசு தனது சொந்த மக்களுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதத்தைப் பயன்படுத்தியதா? பெகாசஸ் குறித்து அவையில் எந்த விவாதமும் நடைபெறாது என அரசாங்கத்தால் எங்களுக்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாட்டின் இளைஞர்களிடம் இதனைக் கேட்க விரும்புகிறேன். நரேந்திர மோடி ஜி தொலைபேசிக்கு ஒரு ஆயுதத்தை அனுப்பியுள்ளார். இந்த ஆயுதம் எனக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகவும் பல தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ஏன் அவையில் விவாதிக்கப்படக்கூடாது?
நாடாளுமன்ற நடவடிக்கைகளை நாங்கள் இடையூறு செய்கிறோம் என கூறப்படுகிறது. நாங்கள் அவையை இடையூறு செய்யவில்லை. நாங்கள் எங்கள் கடமைகளைத்தான் நிறைவேற்ற விரும்புகிறோம். இந்த ஆயுதம் (பெகாசஸ்) இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பயங்கரவாதிகள் மற்றும் தேச விரோதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படிருக்க வேண்டும். இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எதிராக இந்த ஆயுதத்தை (பெகாசஸ் ஸ்பைவேர்) ஏன் பயன்படுத்தினீர்கள் என நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவிடம் கேட்க விரும்புகிறோம்.
எங்களைப் பொறுத்தவரை, பெகாசஸ் என்பது தேசியவாதம் மற்றும் தேசத்துரோகம் தொடர்பான விஷயம். இந்த ஆயுதம் ஜனநாயகத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை இது தனியுரிமை தொடர்பான விஷயம் அல்ல. நான் அதை தேச விரோத செயலாகவே பார்க்கிறேன். நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர்.”
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், "தேசிய பாதுகாப்பு மற்றும் வேளாண் சட்ட பிரச்சனைகளில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளது. இனியும் ஒற்றுமையாக இருக்கும்" என கூறினார்.