நாடு முழுவதும் காதலர் தினத்திற்கு இந்துத்வ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அன்றைய நாளில் கண்ணில் படும் காதலர்களைத் தாக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அந்த இந்துத்வத்தையே தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலமான ராஜஸ்தானில் உள்ள பள்ளிகளில் இனி காதலர் தினம் கொண்டாடப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வசுதேவ் தேவ்னானி, ‘மத்ர-பித்ரா பூஜன் சம்மன் (பெற்றோரை வணங்குதல் மற்றும் மரியாதை செலுத்துதல்) முறை இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் கடைபிடிக்கப்படும்’ என அறிவித்தார்.
‘மாணவர்கள் இன்னொருவரின் மீது காதல் கொள்வதற்கு முன்பாக தங்களது பெற்றோரின் மீது காதல் கொள்ளவேண்டும்’ என்றொரு விளக்கத்தையும் இந்த அறிவிப்பிற்காக அவர் தந்திருக்கிறார்.
வசுதேவ் தேவ்னானி இதுபோல் பல விநோதமான சர்ச்சைகளில் சிக்கியவர். எமர்ஜென்சி குறித்த பாடத்தைக் கொண்டுவருவதற்காக, நாட்டின் முதல் பிரதமர் நேருவின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கினார். ஹல்திகாதி போரில் முகலாய மன்னர் அக்பரை எதிர்கொண்டு இந்திய மன்னர் மகாரானா பிரதாப் வெற்றிகொண்டார் என பாடப்புத்தகங்களில் மாற்றினார். வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் இதைக் கண்டித்தபோது, ‘மாற்றி எழுதப்பட்ட வரலாற்றை நாங்கள் மாற்றி எழுதியிருக்கிறோம். மாணவர்கள் தாங்கள் இந்தியர் என்றும், கலாச்சாரத்தை எண்ணியும் பெருமைப்பட்டு, உண்மையான குடிமகன்கள் ஆகவேண்டும்’ என்று மிகப்பெரிய விளக்கத்தைத் தந்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியொரு விநோதமான விஞ்ஞான அமைச்சர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.