மும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாக இருவேறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிந்து விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை காரணமாக வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில், மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் மழை காரணமாக இடிந்து விழுந்தன. மும்பையின் கோட்டை பகுதியில் உள்ள 6 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டிடத்தில் வசித்து வந்த மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதேபோல் மும்பை மல்வானி பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், அதில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். கோட்டை பகுதியில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளார்.